அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கையில் ஓய்வெடுத்த நாய்- பொதுமக்கள் அதிர்ச்சி
- சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியானது உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் சமீபத்தில்தான் ரூ.3 கோடியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்குள் தெருநாய் ஒன்று புகுந்தது. தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் ஏறி படுத்து ஓய்வெடுத்தது.
இதை அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான், தற்போது நோயாளிகளின் படுக்கையில் தெருநாய் படுத்து ஓய்வெடுத்த சம்பவமும்.
எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.