திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது சரமாரி தாக்குதல்- நடவடிக்கை கோரி ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்
- தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி:
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரெயில்வே டிவிசனில் டிக்கெட் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதிவிரைவு ரெயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்டது. இதில் அரவிந்த்குமார் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் ஏறி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ரெயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் செல்லும்போது, இதில் பயணம் செய்த சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவில் அலுவலராக பணியாற்றி வருபவருக்கும், அரவிந்துக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, அரவிந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, அரவிந்த், விழுப்புரத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரெயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் டிக்கெட் பரிசோதகர் எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் ரெயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்கியவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தாக்குதலுக்கு ஆளான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் கண்ணீர் மல்க கூறியதாவது,
எஸ் 10 பெட்டியில் -8வது இருக்கையில் இருக்க வேண்டிய அந்தப் பயணி குடிபோதையில் தனது உடமைகளை இருக்கையில் வைத்துவிட்டு, ரெயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார்.
உங்களது உடைமைகளை உங்களது இருக்கையில் வைத்துக் கொள்ளுங்கள். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக உறங்காதீர்கள் என கூறினேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, திடீரென கன்னத்தில் பளாரென தாக்கி விட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்துபூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என கூறினார்.
எஸ்.ஆர்.எம்.யு. துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறும்போது,
எஸ். ஆர். எம். ஏ. தொழிற்சங்கம் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இங்கு மொழி பிரச்சனையில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. ஆனால் இந்த விஷயத்தில் யார் அவரை தாக்கி இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயாது என்றார்.