உள்ளூர் செய்திகள் (District)

ஓ.பி.எஸ். இருக்கை மாற்றும் விவகாரம்: சட்டசபையில் நடந்தவை என்ன?- முழு விவரம்

Published On 2022-10-18 06:28 GMT   |   Update On 2022-10-18 06:28 GMT
  • சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார்.
  • இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

சென்னை:

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.30 மணியளவில் இருந்து வரத்தொடங்கினார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்கு வராததால் இன்று அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9.25 மணிக்கு சட்டசபை வளாகத்துக்கு வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி அவரது அறையில் அமர்ந்து இருக்க மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை அவரது அறையில் சென்று பார்த்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சட்டசபையில் பதில் சொல்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் சொன்ன விஷயத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தார்கள்.

அதற்கு முன்னதாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 4 பேரும் சபையில் அமர்ந்திருந்தனர்.

சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார். இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

அவர்களுக்கு எதிரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.

சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்ததும் சபை நடவடிக்கைகள் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக கேள்விநேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சமயத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இருக்கை விவகாரம் தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டார்.

உடனே சபாநாயகர், நான் இப்போது கேள்வி நேரத்துக்கு அனுமதித்துள்ளேன். எனவே உட்காருங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன கருத்தை சபாநாயகரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் எழுந்து நின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுங்கள் என்று உரத்த குரலில் தெரிவித்தனர்.

ஆனால் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து பழனிசாமி தான் சொன்ன கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி பேசினார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு. 'சட்டசபையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. சபாநாயகர் கேள்வி நேரத்தை அனுமதித்த பிறகு நீங்கள் இப்படி பேசுவது முறையல்ல' என்றார்.

ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எழுந்து நின்று சபாநாயகருக்கு எதிராக முழக்கம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட தொடங்கியது. அமளிக்கு இடையே சபாநாயகர் அனைவரிடமும் உட்காரும் படி கூறினார்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கேள்வி நேரத்தின் போது சமரசம் செய்துகொள்ள மாட்டேன். கேள்வி நேரத்துக்கு பிறகு உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்' என்றார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நின்றுகொண்டே பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர். 'நீங்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாதது அல்ல.

சட்டசபை விதி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதாக தெரியவில்லை. நீங்கள் கலங்கம் விளைவிக்க இங்கு வந்தீர்களா? உங்கள் நடவடிக்கை அப்படித்தான் தெரிகிறது.

ஏற்கனவே 1988-ம் ஆண்டு ஜானகி அம்மாள் பதவி பிரமாணத்தின் போதும் இதேபோல் தான் செய்தீர்கள். எனவே சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் பேசுவதற்கு நேரம் தருகிறேன். அமைதியாக இருங்கள்' என்றார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அவரது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பேசினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

சபாநாயகர்:-இப்படி கூச்சல் போட்டு அவை மாண்பை கெடுக்காதீர்கள். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மக்கள் பிரச்சினையை பற்றி பேசத்தான் இந்த அவை.

ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேச நீங்கள் தடையாக இருக்கிறீர்கள். பேரவை விதி 22-ல் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் முதல் ஒரு மணிநேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உள்ளது. நீங்கள் கொண்டு வந்த விதியை நீங்களே மீறலாமா? மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்றார்.

ஆனால் அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். செங்கோட்டையன் உள்பட இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

அமைச்சர் துரைமுருகன்:- சபாநாயகர் எவ்வளவோ சொல்லியும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேட்கவில்லை. சட்ட சபையில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அறிக்கை, இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக நீங்கள் சபையில் அமளி ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது' என்றார்.

ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேறும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடனே அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் அனைவரையும் சபை காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சட்டசபை வாயிலிலும் நின்றபடி சில எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள். அவர்கள் வெளியே வரும் போதும் சபாநயகருக்கு எதிராக கோஷமிட்டபடி வெளியேறினாகள்.

இவ்வளவு அமளி நடந்த போதும் தொடர்ச்சியாக துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் சபையில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளியேற்றப்பட்டதால் அவை நடவடிக்கைகளில் இன்று 1 நாட்கள் கலந்து கொள்ள இயலாது.

Tags:    

Similar News