உள்ளூர் செய்திகள் (District)

கண்ணாடியை உடைத்து வெளியேறிய சுற்றுலா பயணிகள்.

கர்நாடகாவில் இருந்து வந்த சுற்றுலா பஸ் டம்டம்பாறையில் கவிழ்ந்து விபத்து

Published On 2022-08-23 11:14 GMT   |   Update On 2022-08-23 11:14 GMT
  • தேவதானப்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
  • விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொடைக்கானல்:

கர்நாடகாவில் இருந்து 40 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பஸ் இன்று கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தது. காட்ரோடு அருகே டம்டம்பாறை நோக்கி பஸ் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் டிரைவரின் இடதுபுறம் பஸ் பள்ளத்தில் இறங்கியது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வந்ததால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அதில் பாறை மற்றும் மரங்களின் இடையே பஸ் சிக்கிக்கொண்டது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். கதவை திறந்து வெளியே வரமுடியாததால் அவர்கள் அலறினர்.

இதை பார்த்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது பஸ்சுக்குள் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பஸ் தாழ்வாக இருந்ததாலும் உரிய பிடிமானம் இல்லாததாலும் பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தபோதும் உள்புறமாக கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளியே இறங்கினர். அவர்களை உள்ளூர் மக்கள் சாலையின் ஓரத்துக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவதானப்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பயணிகளை மீட்கும் முயற்சியிலும் பஸ்சை அங்கிருந்து அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News