தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் சப்ளை

Published On 2024-10-16 06:34 GMT   |   Update On 2024-10-16 06:34 GMT
  • ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
  • ஆவின் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

சென்னை:

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி குவித்தனர். இதனால் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

ஆவின் பார்லர், விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பால் வாங்கி சென்றனர். வழக்கமாக வாங்கும் அளவை விட ஒவ்வொருவரும் கூடுதலாக பால் வாங்கியதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்தன.

ஆவின் பால் மட்டுமல்லாமல் தனியார் பால் பாக்கெட்டுகளுக்கும் கிராக்கி ஏற்பட்டது.

சென்னையில் ஆவின் பால் தினமும் 14.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுவது வழக்கம். கனமழை எச்சரிக்கை, விடுமுறை விடப்பட்டதால் திடீர் தேவை அதிகரித்தது. இதனால் கூடுதலாக 1.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுகிறது.

2 நாட்களாக தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வினியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தேவையின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பால் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது.

5 பாக்கெட்டுகள் வரை ஆவின் பார்லர்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு மேல் மொத்தமாக கேட்டால் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

அம்பத்தூர் பால் பண்ணையில் மழை நீர் தேங்கியது. அவற்றை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News