உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் மோதி வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்
- உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை வேன் கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
- சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 15 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேனை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த வேன், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கியிருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அவ்வழியே சென்றவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் மோகன், அதில் பயணம் செய்த கவிதா (35), பிரபாகரன் (40), லட்சுமி (35), புகழேந்தி (50), ஆன்டிரியா (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாற்று வாகனம் மூலம் கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.