உள்ளூர் செய்திகள்

கடம்பத்தூர் அருகே செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2023-05-19 06:19 GMT   |   Update On 2023-05-19 06:19 GMT
  • செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
  • செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர்,சுந்தர கணேசன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடம்பத்தூர் துணை மின் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் செல்போன் டவர் அமைக்கும் பணியை இரவில் தொடர்ந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தை முற்றுகையிட்டனர். மேலும் கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம். பணி தொடர்ந்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்றனர்.

Tags:    

Similar News