அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை கூட்டத்தால் பரபரப்பு
- ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
- மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.
இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.