உள்ளூர் செய்திகள்

பஸ்சில் பயணியிடம் கொடுத்து விட்டு மாயம்- உரிமை கொண்டாடும் வாலிபரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுமா?

Published On 2024-01-23 10:27 GMT   |   Update On 2024-01-23 10:27 GMT
  • ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.
  • போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

கோவை:

கோவை காந்திபுரத்தில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி தனியார் பஸ் சென்றது.

அந்த பஸ்சில் இளம்பெண் ஒருவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவரின் அருகில் மற்றொரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் தனது கைக்குழந்தையை, இருக்கையில் இருந்த இளம்பெண்ணிடம் ரெயில் நிலையம் வந்ததும் வாங்கி கொள்வதாகவும், அதுவரை வைத்திருக்குமாறும் கொடுத்தார்.

அந்த பெண்ணும் வாங்கி வைத்து கொண்டார். ரெயில் நிலையம் வந்ததும், குழந்தையை கொடுத்த பெண்ணை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை.

இதையடுத்து அந்த பெண், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சென்று சம்பவத்தை கூறி கைக்குழந்தையை ஒப்படைத்தார்.

போலீசார் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராஜன்(வயது32) என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல கமிட்டியினரை சந்தித்தார்.

அப்போது பஸ்சில் இளம்பெண் விட்டு சென்ற குழந்தை, தன்னுடைய குழந்தை என்றும், அதற்கான உரிய ஆவணங்களையும், போட்டோவையும் காண்பித்தார்.

அவரை குழந்தைகள் நல கமிட்டியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜன் போலீசாரிடம், எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். நான் தற்போது என்ஜினீயராக உள்ளேன்.

கல்லூரி படிப்பை ஈரோட்டில் படித்தேன். அப்போது, எனக்கும், திருச்சியை சேர்ந்த திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தோம்.

எங்களது காதலுக்கு 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கோவை சுந்தராபுரத்தில் வசித்து வந்தோம்.

எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் எனது தந்தை உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

நான் திவ்யாவை திருமணம் செய்ததால் தான் இப்படி நேர்ந்ததாக எனது குடும்பத்தினர் தெரிவித்ததால், எனது மனைவி மனமுடைந்து போனார்.

அவரை நான் சமாதான படுத்த முயன்றபோது எல்லாம் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் நான் திருச்சூருக்கு கட்டுமான பணிகளை பார்வையிட சென்றேன். அங்கிருந்து எனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டேன்.

அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவரை தேடி வந்தேன்.

இந்த நிலையில் தான் அவர் பஸ்சில் வந்த பயணியிடம் குழந்தையை கொடுத்து விட்டு சென்ற தகவல் அறிந்து அதிர்ச்சியானேன்.

உடனே திருச்சூரில் இருந்து புறப்பட்டு, கோவை வந்தேன் தெரிவித்தார்.

மேலும் எனது மனைவி அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை திரும்பி வருமாறு அழைத்துள்ளேன். வராவிட்டாலும் குழந்தையை நானே வளர்ப்பேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை. போலீசார் அவரது மனைவி திவ்யாவை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அவர் வந்த பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

எதற்காக குழந்தையை பஸ்சில் விட்டு சென்றார்? குடும்ப சண்டை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து 2 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

விசாரணைக்கு பின்பு 2 பேரையும் குழந்தைகள் நல கமிட்டியினர் முன்பு ஆஜர்படுத்தி, அந்த குழந்தையின் பாதுகாப்புக்கு சரியான நபர் யார் என்று முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News