கோவையில் மோசடி செய்து துபாய்க்கு தப்பிய பெண் கைது- முதலீட்டாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார்.
- மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா (வயது32).
இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நான் என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்த நிறுவனம் தொடங்கி உள்ளேன்.
அதில் நீங்கள் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும், வருடத்தின் இறுதியில் முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் திரும்ப தந்து விடுவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை ஊக்கத் தொகை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவரது நிறுவனத்தில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூ.2 கோடி அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.
முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.
இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டுள்ளனர்.
அப்போது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்கள் மீதே மதுமிதா போலீசில் புகார் அளித்தார். சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. திடீரென தலைமறைவாகி விட்டார்.
மதுமிதாவை, அவரிடம் முதலீடு செய்தவர்கள் தேடி வந்தனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்தனர். போலீசார் மோசடி செய்த மதுமிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கும் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும், அங்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதை அறிந்ததும், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தப்பி வர இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது.
அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த பாதிக்கப்பட்டவர்கள், மதுமிதாவிடம் பாதிக்கப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு நபரை கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்படி சம்பவத்தன்று அந்த நபர், விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தார். மதுமிதா விமானத்தை விட்டு இறங்கி வந்ததும், அவரை நேரில் பார்த்த பாதிக்கப்பட்டவர், நான் உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளேன். நான் உங்களை பத்திரமாக காரில் கொண்டு கோவையில் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதனை மதுமிதாவும் உண்மை என நம்பி காரில் ஏறினார். இதையடுத்து இரவில், அந்த நபர் காரில் மதுமிதாவை அழைத்து கொண்டு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் நின்றிருந்தனர்.
அவர்கள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.
ஆனால் போலீசார் இது தொடர்பாக நீங்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுமிதாவுடன் கார்களிலேயே இரவு முழுவதும் போலீஸ் வளாகத்திலேயே இருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மதுமிதா திடீரென காரில் இருந்து இறங்கி தப்பியோடினார்.
இதனை பார்த்த, அவரிடம் முதலீடு செய்தவர்கள் மதுமிதாவை பிடிக்க முயன்றனர். அப்போது நீங்கள் என் அருகே வந்தால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் மதுமிதாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மதுமிதா தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகளின் பெற்றோர் மற்றும் தன்னுடன் படித்தவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதும், அவர் துபாய்க்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும், அங்கிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சிலரிடம் பங்கு வர்த்தகம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.
இதுதவிர துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ளும் மதுமிதா, அதன்பின்னர் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும், அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து தப்பி கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.
இவர் இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே மதுமிதா மீது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மினிஜான் பிரதீப் புகார் அளித்தார். அதன்பேரில் மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.