போலீசாரை வெட்டிவிட்டு பனை மரத்தில் ஏறி தப்ப முயன்ற தொழிலாளிக்கு கால் முறிந்தது
- தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 45), பனைத்தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பினனர் ஜாமினில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அதன்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் தலைமையில் ஏட்டு காளிமுத்து (35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவை கூறி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று சட்டை அணிந்து வருவதாக கூறி சென்றவர் அரிவாளுடன் வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
இதை தடுக்க முயன்ற ஏட்டு காளிமுத்துவுக்கு கை, கால்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார் உடனே சுதாரித்துக் கொண்டு ஜேசுராஜாவை வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரை தள்ளி விட்டு ஜேசுராஜா தப்பியோடி உள்ளார். போலீசார் அவரை விரட்டி சென்றனர்.
ஒரு பனை மரத்தில் ஏறிய போது ஜேசுராஜா தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. அவரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.