உள்ளூர் செய்திகள் (District)

இன்ஸ்டாகிராமில் பழகிய கோவை தோழிக்கு பரிசளிக்க வீடு புகுந்து திருடிய வாலிபர்

Published On 2023-02-21 08:24 GMT   |   Update On 2023-02-21 08:25 GMT
  • நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.
  • பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.

வேலூர்:

வேலூர் அடுத்த சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, அரியூர் போலீஸ் நிலையத்தில் நரேஷ்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கருப்பு உடையுடன் சிவப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பு கொண்டவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) குறித்த தகவல் தெரியவந்தது. இவர், ஏற்கனவே அடிதடி வழக்கில் அரியூர் போலீஸ் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது.

அதேநேரம், நரேஷ்குமார் வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையையும், குல்லாவையும் பறிமுதல் செய்தார்.

பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.

அர்ஜூன் ராஜ்குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய கோவை பெண் தோழிக்கு பரிசளிக்க அவர் திருடியது தெரியவந்தது என்றார்.

Tags:    

Similar News