தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 299 மி.மீ. மழை பதிவு
- தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
- மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1 வாரமாகவே கோடை வெப்பம் தணிந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறி கொட்டியது. பின்னர் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை தூறி கொண்டே இருந்தது.
இதேப்போல் வல்லம், குருங்குளம், திருவையாறு, கும்பகோணம், அய்யம்பேட்டை, மஞ்சளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இதில் மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 299.70 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-
மஞ்சளாறு -66.80, குருங்குளம்-34, தஞ்சாவூர்-25, ஒரத்தநாடு-22.40, நெய்வாசல் தென்பாதி-16.40, வல்லம்-16, திருவையாறு-14, அய்யம்பேட்டை-14.