உள்ளூர் செய்திகள் (District)

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே-22-ல் தேநீர் கண்காட்சி

Published On 2023-04-29 09:02 GMT   |   Update On 2023-04-29 09:02 GMT
  • மே 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் கோடை விழாவை முன்னிட்டு தேயிலை சுற்றுலா திருவிழா 2023 தொடர்பான ஆலோசனை கூட்டம், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ள காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேயிலை கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தவும், உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகள் தயாரிக்கும் சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கும் வகையில் அடுத்த மாதம் 22-ந் தேதி குன்னூர் சிம்ஸ்பூங்காவில் தேநீர் கண்காட்சி நடத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தேயிலை சுற்றுலா திருவிழா 2023 மிகச் சிறப்பான முறையில் நடத்திட, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர்.மோனிக்காரானா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குநர் செல்வம், குன்னூர் தேயிலை வாரியத்தின் வளர்ச்சி டாக்டர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிபித்தா, அலுவலர் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News