கலெக்டர் காரில் மோதுவது போல் வந்த வாலிபர்கள்: போலீஸ்காரர்-அதிகாரி கடும் எச்சரிக்கை
- சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.
அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.