பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் - பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை
- தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- குற்றம் செய்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரில் ஆஜராக சம்மன்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரான அம்பை அருகே அடைய கருங்குளத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தரப்பினர் இன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அருண்குமாரின் சகோதரர், அவரது தாயார் ராஜேஸ்வரி, தந்தை கண்ணன் ஆகியோர் தங்களது தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவருடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரி களிடம் ஒப்படைத்தனர். மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராகாமல் எழுந்து வெளியே வந்து விட்டனர்.
தொடர்ந்து அருண்குமார் தரப்பு வழக்கறிஞர் பாண்டிய ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றம் செய்யப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார். பாதிக்கப் பட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலோடு இருந்து வருகிறார்கள்.
பெங்களூரில் வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5-ந் தேதி ஆஜராக 3-ந்தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் நிலையில் அவருடைய நிலையிலிருந்து மேல் அதிகாரியாக இருக்கும் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். டி.எஸ்.பி தலைமையில் விசாரணை என்பது சரியானதாக இருக்காது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உண்மை நிலை வெளிவரும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் தான் உண்மை சம்பவங்கள் வெளியே வந்தது. கைது நடவடிக்கை இருந்தால் தான் துணிச்சலுடன் வெளிவந்து தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சாட்சியம் அளிப்பார்கள். இந்த விசா ரணையை மேற்பார்வை செய்ய உயர் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
நீதித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு இந்த வழக்கில் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.