உள்ளூர் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு

Published On 2023-08-17 03:13 GMT   |   Update On 2023-08-17 07:38 GMT
  • செப்டம்பர் 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
  • 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மருத்துவமனை கட்டுமானப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 18-ந்தேதிக்குள் கட்டுமான பணியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது 150 படுக்கைகள் அதிகரிப்பு உடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு 1264 கோடி ரூபாயில் இருந்து 1977.8 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து 82 சதவீத தொகை கடனாக பெற்று மருத்துவமனை கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது 1622 கோடி ரூபாய் கடன் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதை தொடர்ந்து, 33 மாதங்களில் கட்டி முடிக்க எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News