நாமக்கல் பகுதிகளில் தைப்பூச விழா உற்சாகமாக கொண்டாட்டம்
- ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவ பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும், சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காந்தமலை முருகன்
இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காந்தமலை, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமியை வழிபட்டனர். இக்கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூசத் தேர்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், தைப் பூசத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், சுவாமிக்கு வழக்கம் போல் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல், கட்டளைதாரர்கள் மூலம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, பால் குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தனர்.
அதையடுத்து, சுவாமிக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை பூசத்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கபிலர்மலை முருகன் கோயில், நாமக்கல் அருகில் உள்ள கூலிப்பட்டி, கந்தகிரி முருகன் கோயில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பொம்மைக்குட்டை மேடு கருமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.