உள்ளூர் செய்திகள்

பிரதமராக பொறுப்பேற்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது: தம்பிதுரை எம்.பி. பேட்டி

Published On 2023-06-13 02:18 GMT   |   Update On 2023-06-13 02:18 GMT
  • அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார்.
  • நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம்.

கிருஷ்ணகிரி :

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை பா.ஜனதா மட்டுமே ஏற்படுத்தும் என பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க., என்ற கட்சியை தொடங்கினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தது போல இந்தியாவையும் திறமையுடன் ஆட்சி செய்வார். இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான்.

அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அவரது கருத்தை நாங்கள் ஏற்கிறோம். பிரதமர் மோடி உலக தலைவர்கள் போற்றும் அளவுக்கு சிறப்பான ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார், கலாசாரத்தை எங்கும் பேசி நம்மை தொடர்ந்து பெருமை படுத்துகிறார்.

பா.ஜனதா அரசு கடந்த, 9 ஆண்டுகளில் என்ன செய்தது எனக்கேட்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த காலக்கட்டத்திற்கு முன்பு 18 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது என்ன செய்தது என்று கூறட்டும். நீட் தேர்வை அப்போது எதிர்க்காமல் இப்போது விலக்கு ஏற்படுத்துவோம் என கூறி வருகின்றனர். கடந்த, 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செய்தோம் என தி.மு.க., வினர் கூறுவது வெட்ககேடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News