உள்ளூர் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: நெல்லையில் வெள்ளம் வடியத் தொடங்கியது

Published On 2023-12-19 01:38 GMT   |   Update On 2023-12-19 01:38 GMT
  • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
  • இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News