இந்தியாவின் சிறந்த கைவினை பொருளாக தஞ்சாவூர் 'கலைத்தட்டு' தேர்வு
- நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் உள்பட பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
- போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவுபெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, வீணை, ஓவியம், திருபுவனம் பட்டு, கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், கலைத்தட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் சிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.
இதில் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இவற்றில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து கைவினை பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.