உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்.சுக்கும் வந்தது அந்த ஆசை...!

Published On 2023-06-10 10:22 GMT   |   Update On 2023-06-10 10:22 GMT
  • தமிழகத்தில் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் ஏற்பட்டது போலும்.
  • சசிகாந்த் செந்தில் காய்களை நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

காங்கிரசில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரசில் உள்ள அணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் இவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பி இருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த சுனில் முதல்-மந்திரியின் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவி மந்திரி பதவிக்கு இணையானதாகும். இப்போது சசிகாந்த்தும் நினைத்தாரோ என்னவோ நம்மோடு இருந்தவர் மந்திரி பதவி அளவுக்கு உயர்ந்து விட்டார்.

தமிழகத்தில் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் ஏற்பட்டது போலும். இங்குள்ள சூழ்நிலைக்கு அந்த வாய்ப்பு அரிதுதான் என்பதால் கட்சித்தலைவர் பதவிக்கு குறி வைப்பதாக கூறப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.

வருகிற 20-ந் தேதிக்கு பிறகு நாடுமுழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அந்த தருணத்தில் சில மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அப்போது அந்த பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் சசிகாந்த் செந்தில் காய்களை நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News