கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து மீட்பு ஒத்திகை
- சாலையில் சென்ற ஒரு பஸ்சில் 21 பேர் பயணித்தனர்.
- சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.டி.ஓ அலுவலக பிரதான சாலையில் ஒரு பஸ் வேகமாக வந்தது. அதில் 21 பேர் பயணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. எனவே அந்த பஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பயணிகள் காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக படுகாயத்துடன் இருந்த 12 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை ஆர்.டி.ஓ பிரதான சாலையில் விபத்து பற்றி தெரிய வந்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு சாலை விபத்து ஒத்திகை பயிற்சி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து சென்றனர்.
ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய விபத்து ஒத்திகை சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட பலர் நேரடியாக பங்கேற்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் சாலைவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்தோம். இதற்காக 21 பேர் பயணிகள் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் ஒரு பஸ்சில் அமர வைக்கப்பட்டு மின்கம்பத்தில் மோதுவது போல ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது.
கோவையில் விபத்து ஏற்படும்போது பொது மக்கள் எப்படி செயல்பட வேண்டும், படுகாயம் அடைந்த வருக்கான முதலுதவி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் போலீசார் அறியும்வகையில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டதாக தெரி வித்தனர்.