சேலம் அருகே விபத்து தடுப்பு சுவரில் மோதி ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது
- சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
சேலம்:
மலேசியா ஜேலான் தெண்டல் பேர்மை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவரது மனைவி ராஜேஸ்வரி (40), மகன் தீபன் (21) ஆகியோருடன் சேலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில், தங்கள் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை பகுதிக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது சேலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்ற, அரசு பஸ் கவிழ்ந்து கிடந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால், அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.