நெல்லை சந்திப்பில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சிறுவன்
- அய்யப்பன் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- ஆத்திரம் அடைந்த சிறுவன், அய்யப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 50). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
அய்யப்பன் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சேது(18), தாழையூத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்பனுக்கும், சேதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சேது வேலையை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சேதுவும், சிறுவனும் அய்யப்பன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி வேலையை முடித்துவிட்டு நிறுவனத்தின் அருகே அய்யப்பனும், 15 வயது சிறுவனும் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது என்னை மதிக்காமல் சேது என்னை பற்றி அவதூறாக பேசிவிட்டான். அவனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சிறுவனிடம் அய்யப்பன் கூறி உள்ளார். இதனை அந்த சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த அரிவாளால் அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அய்யப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவன் மற்றும் அவன் இந்த சம்பவத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்த சேது ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலைவழக்காக மாற்றம் செய்தனர்.