கேத்ரின் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- கோத்தகிரியில் தொடர் கனமழை எதிரொலி
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள போக்குவரத்து சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடுகிறது. மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகி உள்ளன.
குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அங்கிருந்து பள்ளத்தாக்குகள், வானுயர்ந்த மலைகள் மட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதிகள், ஆதிவாசி குடியிருப்புகள் மற்றும் மலை ரயில் பாதைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.
இதற்கிடையே கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் தண்ணீர், கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி வருகின்றன.