கோவையில் மாவட்ட திட்டக்குழு தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது
- தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- போட்டியிட விரும்புவோர், 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 என 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்-17, மாநகராட்சி உறுப்பினர்கள்-100, ஏழு நகராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-198, மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-513 என 825 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவர்களில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, தாளியூர் பேரூராட்சியில் ஒன்று என மூன்று காலியிடங்கள் உள்ளன. அதனால் 822 உறுப்பினர் கள் ஓட்டுப்போட தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் சமீபத்தில் வெளியிட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
போட்டியிட விரும்புவோர், வருகிற 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். 12-ந் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 14-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.
போட்டி இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
கலெக்டர் அலுவலக பழைய கட்டிடம், இரண்டாவது தளத்தில் அறை எண் 1-ல், மாலை 4 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்படும்.
தேர்தல் நடவடிக்கைகள் 24-ந் தேதி முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 28-ந் தேதி நடத்த வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருக்கிறது.