தமிழகத்தில் பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணைாயக இருப்பது திராவிட மாடல் ஆட்சி
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
- கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இதில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதை பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இதை உருவாக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி. பெண்கள் வேலை தேடுவதாக இருப்பதைவிட வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவ-மாணவிகள் நன்கு படித்து வளர வேண்டும் என்பதற்காகவும் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் அறிமுகப்படுத்திய திட்டம் நான் முதல்வன் திட்டம். மாணவ-மாணவிகளின் உயர்கல்வி தரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 23 கல்லூரிகள் உருவாக்கப்பட்டு அது கூட்டுறவு துறையின் மூலமாக ஒரு கல்லூரியும் அரசு கலைக் கல்லூரியும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை அரசு கல்லூரியில் தொடக்கத்தில் படித்த மாணவிகளின் எண்ணிக்கை விட தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது.
கல்லூரியில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி கல்வி வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கல்லூரியில் 766 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இக்கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் என பெயர் சூட்டப்படும் என பேசினார். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், நிலக்கோட்டை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டியன், நிலக்கோட்டை நகரச் செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.