போதிய வெளிச்சமின்றி காணப்படும் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது.
- இதனால் பக்தர்கள்-பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகரில் மையப்பகுதியாக மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் ஏராளமான கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. அதனால் இந்த பகுதியில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். மேலும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் எந்த நேரத்திலும் இந்த பகுதியில் காணலாம்.
தமிழ்நாடு மட்டு மில்லாமல் இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்லும் இடமாகவும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பலர் நடைபயிற்சியும் செய்து வருகின்றனர். மேலும் சிலர் கோவில் சுற்றுவேலியை ஒட்டியுள்ள திண்டில் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர்.
இந்த நிலையில் மாலை, இரவு நேரத்தில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மேல கோபுர தெரு சந்திப்பு, நேதாஜி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்விளக்குள் சரிவர எரிவதில்லை என பக்தர்கள், பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின் விளக்குகள் சரியாக எரியாததால் இந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளதாகவும், போதிய வௌிச்சம் இல்லாததால் திண்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு 7 மணிக்கு மேல் இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில் வியாபாரம் நடக்கும். வெளிச்சம் குறைவாக உள்ளதால் வாடிக்கை யாளர்கள் வந்து செல்வது சிரமமாக இருப்பதாக வியா பாரிகள் தெரி விக்கின்றனர். மேலும் இரவில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களின் அழகை ரசிப்பதற்கும், புகைப் படங்கள் எடுப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் பலர் வருகின்றனர்.
ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு நவீனமாக்கல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய மைய மாகவும் உலக பிரசித்தி பெற்ற இடமாகவும் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பகுதி நல்ல வெளிச்சத்துடன் பராமரிக் கப்பட வேண்டும் எனவும், பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வசதி களை மேம்படுத்த வேண் டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.