மின் விளக்குகள் எரியாததால் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள்
- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.
குனியமுத்தூர்
கோவை சுந்தராபுரம் எஸ்.பி.டவர் பின்புறம் செங்கப்ப கோனார் லே-அவுட் அமைந்துள்ளது.
இந்த பகுதியையொட்டிய செங்கப்ப கோனார் தோட்டம் மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது.
இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் நிற்பர் யார் என்று கூட கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கடும் இருள் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாததால் நள்ளிரவில் விநாயகர் கோவில் முன்பு 2,3 பேர் நின்று கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கத்தி உள்ளிட்ட பயரங்கள் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என நினைத்து மக்கள் சென்று அவர்களிடம் எதுவும் கேட்பதில்லை.
காலையில் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் காலி பாட்டில்களாக கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் பதற்றாகவே காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் சமூக விரோதிகள் அதனை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அப்பகுதி முழுவதும் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் அப்பகுதியில் யாரும் நிற்க மாட்டார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்விளக்கு இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள பரதநாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு போனது. மேலும் வழிப்பறி சம்பவமும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.