நெல்லை ரெயில் நிலைய சாலையில் கடை முன்பு கிடந்த மர்ம பையால் பரபரப்பு
- சந்திப்பு த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது.
- ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் தவறுதலாக எடுத்துச்சென்றுள்ளார்.
நெல்லை:
குடியரசு தின விழாவையொட்டி நெல்லை ரெயில் நிலை யத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கமிஷனர் ராஜேந்திரன் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த சேகர், நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் காளிமுத்து, நடராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பையை கைப்பற்றி சோதனை நடத்தினர்.
அதில், துணிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பை யாருடையது? எப்படி அங்கு வந்தது என்பது? குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லையை சேர்ந்த குமார் என்பவரும், நாசரேத்தை சேர்ந்த ராபர்ட் ஜெபஸ்டியான் என்பவரும் சென்னையில் இருந்து ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்து இன்று சந்திப்பு ரெயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது தவறுதலாக ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் த.மு.சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தபோது மறந்து விட்டு அந்த பையை அங்கேயே விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கைப்பற்றிய போலீசார் அதனை ராபர்ட் ஜெபஸ்டியானிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.