கோவையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்தது
- கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
- மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்னர் தினமும் 35-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது.
பல நாட்களுக்குப் பின்னர் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப தொடங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-கோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் நிரம்பி செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.
சில சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.