தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியில் முறைகேடு நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- தஞ்சாவூர் ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும்.
- தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும் என்றார்.
மண்டல குழு தலைவர் எஸ்.சி. மேத்தா : ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் காந்திமதி : தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோயில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஆனந்த் : காமராஜர் சந்தையில் சரியான செயல்பாடு இல்லாததால் 100 கடைகளைத் திரும்ப ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோபால் : எனது வார்டில் 90 சந்துகள் உள்ளன. ஆனால் தூய்மை பணிக்கு 3 பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை தூர் வருவதற்கு 2 பணியாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் : மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்ததாரர்தான் செலுத்த வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி தூய்மை பணியாளிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆணையர்: இத்திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.
மேயர்: இது தொடர்பாக 7 நாட்களுக்குள் தங்களுக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என்றார்.இருந்தாலும் இதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கூறினார். இதையடுத்து மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களே வஞ்சிக்காதே என முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தூய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, இரண்டாவது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை .
இவ்வாறு அவர் கூறினார்.