உள்ளூர் செய்திகள்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகிஷாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி

Published On 2022-10-05 10:13 GMT   |   Update On 2022-10-05 10:13 GMT
  • விஜயதசமி மற்றும் மருதமலை முருகன் கோவிலில் மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.
  • மூலவர் தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்து மாகாதீபாரதணை காட்டப்பட்டது

வடவள்ளி,

கோவை மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டத்தின் சுற்றுப்புறபகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

முக்கியமாக விழா தினங்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று சரஸ்வதி பூஜையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இன்று விஜயதசமி மற்றும் மருதமலை முருகன் கோவிலில் மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.

தொடர்ந்து கோ பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜை நடந்தது. 8.30 மணிக்கு கால சந்தி பூஜை நடந்தது. மூலவர் தங்க கவச உடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்து மாகாதீபாரதணை காட்டப்பட்டது.

11:30 மணியளவில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

12 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமி, மகிஷாசூரனை வன்னி மரத்தில் அம்பு விட்டு வதம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

Similar News