கடலூரில் வாழைத்தார் விலை கிடு கிடு உயர்வு
- கடலூரில் வாழைத்தார் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
கடலூர்:
கடலூர் அருகே ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை , சாத்தான்குப்பம், கீரப்பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளையம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப்பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 700 ரூபாய்க்கும், பூவன்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் 500 ரூபாய்க்கும், ஏலக்கி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாழைப்பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலையில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.