உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பனை மர விதை நடும் பணியை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்களை உருவாக்கும் திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்- காயல்பட்டினம் விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு

Published On 2022-10-21 08:52 GMT   |   Update On 2022-10-21 08:52 GMT
  • மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.
  • கலெக்டர் செந்தில்ராஜ் பனை விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.

இதன்படி காயல்பட்டினம் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பனைமர விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

நெல்லை மாவட்டத்தி லிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் 36 ஆயிரம் மர விதைகள் விதைக்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த ஐந்து ஆண்டுகளாக மதர் சமூக சேவை அமைப்பு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

இதன்படி இதுவரை 70 லட்சத்து 15 ஆயிரத்து 439 பனைமர விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.இந்த செயல் பாராட்டுக்குரியது. தொலைநோக்கில் பயன் தரக்கூடிய பனை மரங்களை வளர்க்கும் திட்டம்

எல்லோரும் இணைந்து மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் பேசுகையில், தமிழகத்தில் 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே உள்ளன.அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 4 சதவீத மரங்கள்தான் இருக்கின்றன. ஆகவே அனைத்து பொதுமக்களும் மரம் நடும் பணியில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் கென்னடி வரவேற்று பேசினார்.

மாநில துணைத் தலைவர் சுதாகர், மாநில செயலாளர் டேனியல் மோசஸ், மாவட்ட தலைவர் ராஜ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், வாவு கல்லூரி மாணவிகள், காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன்பட்டினம் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News