பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
- நடவடிக்கை எடுக்காததால் அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக முதல் மன்ற கூட்டத்திலேயே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர்ஜகபர் அலி கோரிக்கை வைத்து, பேரூராட்சி மன்றத்தின் 27-வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 14-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இருந்தாலும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.