கொள்ளையடிக்க சென்ற வீட்டில் ஹாயாக தூங்கிய கொள்ளையன்
- தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை.
- போதையில் படுத்து தூங்கிய கொள்ளையன்.
கோவை:
கோவை அருகே உள்ள காட்டூர் ராம்நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ராஜன்(வயது53). இவர் பாதாம் பிஸ்தா பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி கதிர்நாய க்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். ராஜன் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்று விட்டார்.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அவர் சென்ற பின்னர் வீட்டின் அருகே வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.
பின்னர் வீட்டில் நகைகள், பணம் உள்ளதா என ஒவ்வொரு அறையாக தேடி பார்த்துள்ளார். அப்போது ஒரு அறையில் பொருட்களை தேடிய போது, எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்து விட்டார்.
ஏற்கனவே கொள்ளையடிக்க வருவதற்கு முன்பு மது குடித்து விட்டு, வந்ததால் போதை தலைக்கேறிய அவர், கீழே விழுந்ததும், நாம் எதற்காக வந்தோம் என்பதை மறந்து அப்படியே அங்கேயே அசந்து தூங்கி விட்டார்.
இதற்கிடையே வெளியில் சென்றிருந்த ராஜன், சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்த அவர், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தனது நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரிவித்து, அவரை துணைக்கு அழைத்துக் கொண்டு பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தது யாராக இருக்கும் என தேடினர்.
அப்போது வீட்டில் உள்ள தரையில் ஒருவர் தூங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ராஜன் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பெருமாள்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கருமத்தம்பட்டி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
அவர் வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் கொள்ளையடிக்க முடிவு செய்து, கதவை உடைத்து உள்ளே நுழைந்ததும், வீட்டிற்குள் பொருட்களை தேடி பார்த்த போது, தவறி கீழே விழுந்ததில் அப்படியே தூங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் போதையில் படுத்து தூங்கிய கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டது.