மணிமுத்தாறு அருகே தற்காலிக பாலத்தை தரமாக அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
- ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது.
- மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாச முத்திரம் சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.
புதிய பாலம்
அதன் ஒருபகுதியாக மணிமுத்தாறு-கல்லிடைக்குறிச்சியை இணைக்கும் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய பாலத்தை உடைக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
இதனால் மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதில் நீர் செல்வதற்காக குழாய் ஒன்றினை வைத்துவிட்டு அதன் மேல் மணல் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்து மண்ணரிப்பு ஏற்பட்டதால் தற்காலிக பாலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதன் காரணமாக மணிமுத்தாறு ஜமீன் சிங்கம்பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு காவல் படையினரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே தற்காலிக பாலத்தை தரமாக அமைத்து, புதிய பாலம் வேலையையும் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.