உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2024-08-04 08:31 GMT   |   Update On 2024-08-08 08:54 GMT
  • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
  • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

பொன்னேரி:

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News