புழல் ஜெயிலில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தங்கை
- சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது.
செங்குன்றம்:
நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா என்கிற வெள்ளைசெல்வா. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள செல்வாவை சந்திக்க அவரது தங்கை மீனாலட்சுமி வந்தார். அவர் அண்ணனுக்கு கொடுப்பதற்காக ஜீன்ஸ்பேண்ட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஜீன்ஸ்பேண்ட்டை பரிசோதித்த போது அதில் உள்ள பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அண்ணன் செல்வாவுக்கு கொடுக்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக மீனாலட்சுமி தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
புழல் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள பகுதியில் நேற்று இரவு சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? ஜெயிலுக்குள் செல்போன் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.