உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் இருந்து களக்காட்டுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்ற போது எடுத்த படம்.

சாதி, மதத்தின் பெயரால் நாட்டில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

Published On 2023-09-08 08:55 GMT   |   Update On 2023-09-08 08:55 GMT
  • களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.
  • பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என ரூபி மனோகரன் கூறினார்.

களக்காடு:

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அதன் நினைவாக களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.

களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வில் நடைபயணம் தொடங்கிய அவர் சுப்பிரமணியபுரம், ஊச்சிகுளம் விலக்கு, புதூர், பெல்ஜியம், களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று களக்காடு காந்தி சிலை அருகே நடைபயணத்தை நிறைவு செய்தார்.

அதன் பின் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னதாக நடைபயணத்தின் போது ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

'ராகுல் காந்தி மக்களை நேசிக்கும் தலைவர், அவருக்கு பதவி, புகழ் மீது ஆசை கிடையாது. அவரது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை உலகமே பாராட்டியது. நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. நாடு பின்னோக்கி செல்கிறது. ஏழைகள், இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.

பணக்காரர்கள், பணக்காரர்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பா.ஜ.க.வினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுகின்றனர்.

இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்பட ஆயிரக்க ணக்கானோர் சென்றனர். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நாங்குநேரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

காங்கிரசார் நடைபயணம்

நாங்குநேரி கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பிருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று நடைபயணம் சென்றனர்.

Tags:    

Similar News