கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கோரிக்கை
- புளியரையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
கடையம்:
தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் புளியரையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலை மலைப்பாதையாகவும், குறுகிய சாலையாகவும் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தென்காசி மாவட்ட மக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகிறது.
தென்காசி மாவட்டத்தி லிருந்து வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் போக்கு வரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதிக அளவில் கனரக வாகனங்கள் கனிமங்களை ஏற்றி செல்வதால் சாலைகள் பாதிக்கப்படுவதோடு சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசு படுகிறது.
மேலும் குறைந்த யூனிட் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு அதிக யூனிட் கனிம வளங்களை ஏற்றி செல்வதால் தமிழக அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது பெரும்பாலான குவாரிகள் உள்ள கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியே கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் சேதம் அடைகிறது.
கிராமச் சாலைகள் அதிகனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றது தானா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்ட வேண்டும்.
எனவே கேரளாவிற்கு புளியரை வழியாக அதிகனரக வாகனங்கள் செல்ல நிரந்தரமாக தடை செய்ய உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.