சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கல்யாணம்
- காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
- விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுக்கை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது.
தினமும் இரு வேலையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்தல் நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்தல் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
இதனை காண வரும் பக்தர்களுக்காக பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி, மேலும், மருத்துவ வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.