உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் இரவு முழுவதும் மின்தடையால் தவித்த மக்கள்

Published On 2024-05-31 11:15 GMT   |   Update On 2024-05-31 11:15 GMT
  • கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
  • மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர்:

கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் மக்கள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10 மணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்வினியோகம் சீரானது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இடையிடையே சுமார் 10 நிமிடம் மட்டும் மின்வினியோகம் வழங்கபட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.


இதனால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் விடிய, விடிய தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் யாரும் பதில் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர், தேரடி பகுதியில் இரவு நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News