தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி
- 2 பேர் கைது
- கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கைவரிசை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கிடங்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்( வயது 67). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜன் தனது மனைவி ஜெயக்குமாரி(59) மற்றும் ஜெயக்குமாரியின் சகோதரி காஞ்சனா(50) ஆகிய 3 பேரும், கடந்த 19-ந்தேதி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், நடராஜன், ஜெயக்குமாரி மற்றும் காஞ்சனா ஆகியோரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கேட்டு மிரட்டினர். அப்போது பயந்துபோன 3 பேரும் கூச்சலிட்டனர்.
அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது, பின் வாசல் வழியாக மர்ம கும்பல் தப்பிச்சென்றனர். இந்த நிலையில் மர்ம கும்பலின் பைக், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் சுந்தர், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கோவிலூர் கிராமம், களத்து மேட்டு தெருவில் வசிக்கும் சந்தானம் மகன் சுந்தர்(38) மற்றும் செய்யாறு நகரம் கொடநகர் சமாதியான் தெருவில் வசிக்கும் ரங்கநாதன் மகன் விக்னேஷ்(32) ஆகியோர் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் உதயா, கரியன் மற்றும் பேபி ஆகிய 3 பேர் கொண்ட கூலிப்படையினர் மூலம் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நடராஜனிடம் சுந்தர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
கடன் தொகைக்கான வட்டி பணத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் அசல் தொகையை சேர்த்து ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து ரூ.4 லட்சத்தை சுந்தர் கொடுத்துள்ளார்.
மேலும் நடராஜன் மீதமுள்ள ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், தனது நண்பர் விக்னேஷ் உதவியுடன் சென்னை குரோம் பேட்டை கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் மூலம் நடராஜன் வீட்டில் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 2 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சென்னை கூலிப்படையைச் சேர்ந்த உதயா, கரியன், பேபி ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.