திருவண்ணாமலையில் தீபாவளி பட்டாசு விற்பனை
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட அறிவுறுத்தல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகள் குவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தரமான பட்டாசு நிறுவனங்களிடம் இருந்து 65 லட்ச ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் 450 ரூபாய் முதல் 1865 ரூபாய் வரையில் கிப்ட் பாக்ஸ்கள், சாக்லேட் கேண்டில், டிக்கேட், அனிமல் ஷோவர், டெம்பிள் ரன், டைனோசர், ஜிராபி, கிண்டர் ஜாய், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஆகிய சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.