மரத்தில் மினிவேன் மோதி விவசாயி பலி
- 2-மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா, கரிக்கலாம்பாடி ஊராட்சியை அடுத்த ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (54) விவசாயிகள்.
இவர்கள் இருவரும் இன்று (2-ந்தேதி) அதிகாலை 4 மணி அளவில், தங்களது நிலங்களில் விளைந்த மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட பொருட்களை, மாதப்பூண்டியை சார்ந்த பிரசாந்த் (26) என்பவருக்கு சொந்தமான மினி வேனில் ஏற்றிக்கொண்டு, கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
கருங்காலிகுப்பம் அருகே வரும்போது எதிர்பாராத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் குமார், பழனி மற்றும் டிரைவர் பிரசாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் பிரசாந்த் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். பழனிக்கு தலை, கை மற்றும் காலில் படுகாயம் அடைந்து வாகனத்தில் சிக்கி கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினர் 2-மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பழனியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.