செங்கம் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
- போதுமான சுகாதார வசதிகள் இல்லை
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு வெளிநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவு சுகாதார பணிகள் செய்வதில்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 தினங்களாக செங்கம் பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் மழை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நோயாளிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இது போன்ற சுகாதார சீர்கேடுகளால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவறை கட்டிடத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், அரசு மருத்துவமனை முழுவதும் சுகாதார பணிகளை முழுமையாக செய்யவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.