சாத்தனூர் அணையில் நீர்மட்டம் 108 அடியாக உயர்வு
- வினாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
- ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 210 கனஅடி நீர்வரத்து உள்ளது.
தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து தென்பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 108.20 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 7,321 மில்லியன் கனஅடி உள்ள அணையின் கொள்ளளவு மழையின் காரணமாக தற்போது 5,099 அடியாக உள்ளது.
தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள ஆற்றங்கரையோர கிராம மக்கள், எச்சரிக்கை யுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றைக் கடந்து அழைத்து செல்லவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.